உலகையே   நிமிர்ந்து பார்க்க வைத்த சாதனைப் பெண் – தர்ஜினி சிவலிங்கம்

07 ஆகஸ்ட் 2022

நேர்காணல் : - அபிலேஷா சேகர்
எழுதியவர் : ஆரணி பரமசாமி

Illustrator: Devni Jayakody

இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவியும், உலகின் மிக உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம், 2019ஆம் ஆண்டு உலக வலைப்பந்தாட்டக் கிண்ணப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையாக உலக சாதனையைப் பதிவு செய்து பல பாராட்டுகளைப் பெற்றவர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து சாதாரண வாழ்க்கைச் சூழலில் வளர்ந்த அவர், விளையாட்டின் மீது அதீத ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரு மிகச்சிறந்த வீராங்கனை.

தமிழர் வரலாறு அதிகமாக காணப்படும் யாழ்ப்பாணத்தின் புன்னாலைக்கட்டுவன் என்னும் அழகிய கிராமத்தின் குக்கிராமமே  ஈவினை. இந்த விவசாய நிலம் காலத்துக்கும் விளைச்சலை  அள்ளிக்கொடுக்கும்  பூமி,  இந்த ஊரைச் சேர்ந்தவர் தான்  தர்ஜினி  சிவலிங்கம். ஆறு பிள்ளைகளைக்கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது  பெண்குழந்தையாகப்  பிறந்தார். சிறு வயதில் இருந்தே ஒழுக்கமும்  ஊக்கமும் உள்ளவராகவே திகழ்ந்தார். யுத்தகாலத்தில் ஏற்பட்ட வடுக்களும்  தடைகளுக்கும்  தர்ஜினியையும்  விட்டுவைக்கவில்லை.

பாடசாலைக்காலங்களில் பல்வேறு இடர்களைச் சந்தித்தே தனது பாடசாலைக்கல்வியை  கற்றுமுடித்தார் . அதன் பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை நிறைவு செய்தார். ”பாடசாலைக்காலத்தில் தான் ஒரு வலைப்பந்தாட்ட வீராங்கனையாக  வருவேன்” என்னும் எண்ணமே இல்லாமல் வாழ்ந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.  2004ம்  ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற  இலங்கை வலைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் தெரிவில் பங்குகொள்வதற்கான  வாய்ப்பு இவருக்கு கிடைத்தது, அச்சந்தர்ப்பத்தை  அவர் பயன்படுத்திய  விதமே சிறப்புக்குரியது "நான் நினைக்கிறன் அது எனக்கு கிடைத்த அறிய சந்தர்ப்பம் நான் அதை இழக்க விரும்பவில்லை , எல்லாத்தையும் சவாலாகவே எடுத்தேன்". 

வலைப்பந்தாட்ட  சம்மேளனத்தின் தெரிவில் தான் தெரிவு செய்யப்பட்டது தொடர்பில் தெரிவித்த போது "எப்படியாவது அணிக்குள் தெரிவாகிவிட வேண்டும் எனும் எண்ணம் இருந்தது, உயரம் ஒரு advantage ஆக இருந்ததே தவிர என்னுடைய முயற்சி தான் நான் அணிக்குள் போனது" என்று அவரது திடனமான நம்பிக்கையையும் விடா முயற்சியையும் வெளிப்படுத்துகிறார்.

இப்படி உறுதியான மனதோடு சாதிக்கநினைத்த இவருக்கு அடுத்தடுத்த சவால்கள் நிறையவே காத்திருந்தன. தெரிவின் தகுதிகாண் போட்டிகள், பயிற்சிகள்  என அனைத்தும் கொழும்பில் நடைபெற்றது, அதன் போது பல கஷ்டங்களுக்கு முகங்கொடுத்தார். மொழி, கலாசாரம்,பொருளாதாரம் போன்ற  பல்வேறுபட்ட  விடயங்கள்  சவாலாகவே  அமைந்தன. சுயமாக கருத்துக்களை  பகிந்துகொள்ளக்கூட, மொழி தெரியாமல் இருந்த சூழ்நிலையிலும் இந்த விளையாட்டுத் துறைக்குள்ளே தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்க்காக  ஒவ்வொருநாளும் கடின உழைப்போடு மொழிகளைக் கற்று, கலாசாரத்தை அறிந்து, பொருளாதார சவால்களையும்  எதிர்கொண்டு  தனது உயரத்தை தனக்கு சாதகமாகப்  பயன்படுத்தி,  உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிகளவில் பங்குகொள்ள ஆரம்பித்தார்.  

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் தங்களின் திறமைகளை உலகறியச்செய்து  தங்களை நிரூபித்து,  வெளிவருவதற்க்கு பல்வேறு விதமான சவால்களை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் உள்ளது. அந்தவகையில் தர்ஜினி சிவலிங்கம் அவர்களும்  தனது  விளையாட்டுதுறைக்குள் சாதிக்கநினைத்த  நேரம் பெரும் தடையாகவும், சவாலாகவும் அமைத்தது அவரின்  பொருளாதார நிலைமை. ஒரு விளையாட்டு வீராங்கனைக்கு தனக்கான சீருடைகள் காலணிகள் ,போக்குவரத்து ,மற்றும்  இதர தேவைகளுக்கான செலவுகள் மட்டுமல்லாது ஒரு வீராங்கனை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை பெற்றுக்கொள்வதிலும்  பொருளாதார நிலைமை செல்வாக்குச் செலுத்துகின்றது. இலங்கையை பொறுத்தவரையில்  அநேகமான தேசிய அணிகளில்  உள்ள வீரர்கள்  பின்தங்கிய  பிரதேசங்களில் இருந்தே உருவாகியுள்ளார்கள் எனவே தர்ஜினி கூறியது போல பொருளாதார சவால் என்பது எமது வீர/ வீராங்கனைகள்  எதிர் கொள்ளும்  மிகப்பெரிய சவால்தான்.

உலக்கின் மிக உயர்ந்த வலைப்பந்தாட்ட வீராங்கனை என்னும் பெயர் தர்ஜினி  சிவலிங்கம் அவர்களுக்கு இருந்தாலும், 6அடி 10 அங்குலம்  என்னும் இவரது உயரம் அவருடைய வாழ்க்கையில் அவரின் குட்டிக்குட்டி ஆசைகளுக்கு தடையாகவும்  பல சந்தர்ப்பங்களில் பிறரின் கேலிக்கும் ஆளாக்கியுள்ளது, "இந்த உயரத்துல நான் நிறைய கவலைப்பட்டிருக்கிறேன். நிறைய சந்தர்ப்பங்களை இழந்திருக்கிறேன். எனக்கு சின்ன வயசில மேடையில் ஏறிப்பேச  ஆசை, ஆனால்  மேடையில ஏற பயம்  எல்லாரும் என்னைப்பார்த்து சிரிப்பார்கள் என்று, அதுபோல town பாடசாலையில் படிக்க வேண்டும் என்றும்  ஆசை இருந்தும் போகவில்லை மற்றவர்கள் என்னை பார்ப்பார்கள்  சிரிப்பார்கள் என்று" இப்படி இவரது  உயரத்தை சிலர் வியந்தாலும்  அவருக்கு  பல இடங்களில் தனது ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதாக  கூறுகிறார்.

தர்ஜினியை பொறுத்தவரையில் தனது கால்களுக்கு உரிய பாதணிகளை குறிப்பாக விளையாட்டுக்கு பயன்படுத்தும் சப்பாத்துக்களை சரியான அளவில் பெற்றுக்கொள்வதென்பது  மிகப்பெரிய பிரச்சினையாகவே இருந்தது. 

இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் 100 சர்வதேச போட்டிகளை கடந்த வீராங்கனை  என்னும் பெருமைக்குரிய தர்ஜினி,  எப்போதும்  எதிர் அணிக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளார். இதுபற்றி  அவர் கூறுகையில்  “15 வருட காலமாக உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன்.  என்னுடைய  விளையாட்டு யுத்திகளை  சரியாக அறிந்து கொண்ட எதிரணியினர் எப்போதும் என்னை தடுக்கக்கூடிய புதிய யுத்திகளை அறிந்துகொண்டு   மைதானத்துக்குள் நுழைவார்கள்,  இருந்த போதும் மாறுபட்ட வியூகங்களை அமைத்து எதிர்த்து போராடி கிண்ணங்களை சுவீகரிப்பது என்பது சாதாரண விடயமல்ல”என்கிறார். 

ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பின்னாலும் அவர்களை ஊக்கப்படுத்தி  வெற்றிகொள்ளவைக்க முன்நிற்பவர்கள்  சிலர்தான், அந்த வகையில் தர்ஜினி சிவலிங்கம் அவர்களின் சாதனைக்கு பின்னாலும் அவருடைய பெற்றோர்  சகோதரர்கள் மற்றும்  பயிர்ச்சியாளர்கள் என பலரும் பாரிய பங்குவகின்றார்கள். 

தர்ஜினி அவர்களை எப்போதும் உற்சாகப்படுத்தும் ரகசியத்தை இப்படிச் சொல்லியிருக்கிறார் "என்னோடு எப்பவுமே இருக்கும் doll.  இதை நான் எங்க போனாலும் என்கூடவே வைத்திருப்பேன்  இதை எனக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Bunnings என்கிற  சீமெந்து பொருட்களை செய்யும் கடையில் வாங்கிவந்து  எனக்கு என்னுடைய ஆஸ்திரேலியா பயிச்சியாளர்  தந்தார். கடுமையாக விளையாட வேண்டும் என்கிறத சொல்லுறமாதிரி இருக்கும், என்ன பொறுத்தவரையிலே ஒரு lucky என்று தான் நான் பாக்கிறேன்.  final match நேரம்  நான் விளையாடும் போது  வெளில bench  ல அது இருக்கும், ஏதாவது fail நடக்கிறனேரம் மற்ற பிள்ளைகள் அந்த doll ஐ  தூக்கிக் காட்டுவார்கள். அதுவே என்னை உற்சாகப்படுத்தும். எந்த  நாட்டுக்கு போனாலும், வேலை நேர்காணல்களுக்கு போனாலும் கொண்டேபோவன்” என்கிறர்.

தர்ஜினி சிவலிங்கம்  அவர்களுக்கு, இப்போது தன் உயரம் ஒரு பொருட்டே இல்லை. "நான் positive ஆகவே எல்லாத்தையும் எடுத்துக்கொள்வேன்  negative  ஆக நான் எதையும் எடுத்துக்கொள்வதில்லை  எல்லாமே ஒரு நன்மைக்குத்தான்" என கூறுகிறார்.  இப்படியான எண்ணம் இருந்தாலே போதும்  வாழ்க்கையில் வருகின்ற எந்த ஒரு கவலையான விடயங்களையும் இலகுவாக கடந்து செல்லலாம். தரஜினியின் வெற்றிப் பாதைக்கு அவரின் நேர்மறையான எண்ணங்களும் முக்கிய காரணமே. 

பெண்களிடம் உள்ள பொதுவான கருத்து  தனித்துவமாக சொந்தக்காலில் நின்று  சாதிக்கவேண்டும் என்பதாகும். அந்த வகையில் தர்ஜினி சிவலிங்கம் அவர்களும் விளையாட்டை தவிர  இலங்கையின்  முன்னணி வங்கி  ஒன்றின் ஊழியராகவும் கடமையாற்றி வருகிறார். " நானாக உழைத்து என் சொந்தக்காலில் நிற்பதே என் சந்தோஷம் " என்கிறார்  தர்ஜினி. 

இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஏமாற்றங்கள் தோல்விகள்  கோபங்கள்  போன்றவையும் அடிக்கடி வரும், இவற்றையும் எதிர்கொண்டே  ஆகவேண்டும் தர்ஜினியைப்  பொறுத்தவரையில் நம்பிக்கை துரோகங்களும், பொய்களும் இவருக்கு கோபத்தை  வரவைக்கும் விடயங்கள். இவருக்குள்ளும் பயம் இருக்கிறது. அதை இவர்  இப்படி கூறுகிறார் "Match தோற்ற பயம் "  ஆரம்ப காலத்தில் விளையாடும்  போது  வெற்றி கிடைக்குமா? தோல்வி அடைவோமா? என்கின்ற  பயம் இருந்தது,  ஆனால்  அதன்  பிறகு  வெற்றிக்காக மட்டுமே விளையாடிய சந்தர்ப்பங்களில் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தால்  பயம் வரும்” என்கிறார். வாழ்க்கையில் பயம் என்பது இருக்கவேண்டும் இருந்தால் மட்டுமே வெற்றிகளை தனதாக்க  முடியும். இந்த பயம் கூட  தர்ஜினியை பொறுத்தவரையில் ஆரோக்கியமானதே. 

தர்ஜினியின் வாழ்நாளில்  தன்னைப்போன்ற சாதாரண குடும்பத்தில் இருந்து சாதிக்க நினைக்கும் பெண் குழந்தைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவ வேண்டும் என எதிர்பார்க்கிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்து பின்தங்கிய  கிராம சூழலில்  வளர்ந்து  சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு, தர்ஜினியின் வாழ்க்கை பயணம் ஒரு மறுக்க முடியாத சிறந்த எடுத்துக்காட்டு. 


Reference Links and Further Reading

  1. A player with many highs in her life, www.sundaytimes.lk, 1st November 2017, https://www.sundaytimes.lk/090712/Plus/sundaytimesplus_08.html

  2. About: Tharjini Sivalingam, DBpedia, https://dbpedia.org/page/Tharjini_Sivalingam

  3. Liverpool, Rebecca Myers and Sophie Reynolds"Netball World Cup: shortest player runs rings round  tallest, but Australia triumphs"The Times.  11 July 2021.

  4. Being a Tamil never bothered me as a player – Tharjini Sivalingam, The morning, 20th July 2023, https://www.themorning.lk/articles/5334


Netball - Individual Achievements: 

  • City West Falcons, Australia: 2017 - Present 

  • St. Albans SC, Australia: 2017 - Present

  • Xenith SC, Maldives: 2016

  • World Record Holder for Top Scorer in the 15th World Netball Championship - Liverpool, 2019

  •  Second World Highest Goal Shooting (98%) in World Cups 

  • Asian Record Holder in Goal Shooting (96%) in the 7th Asian Netball Championship - Malaysia, 2009 

  • Captain of Sri Lanka National Netball for World Netball Championship, 2011 and in 2012

  • Vice-captain of Sri Lanka National Netball for Asian Netball Championship, 2009

  • Best and Fairest Player of City West Falcons and Most Valuable Player of VNL, Australia, 2017

  • Hotshot Award Winner at Geelong Netball League, Australia, 2017 

  • Best Player and Best Shooter of National Netball Championship, Maldives, 2016 

  • Coaching Accreditation with Netball Australia Foundation, May 2017 

Netball - International Achievements (As a Team Member): 

  • Champion of 11th Asian Netball Championship – Singapore, 2018 

  • Runner up - St. Albans Sports Club at Geelong Netball League - Melbourne, 2017

  • Champion - Xenith Sports Club at National Netball Championship - Maldives, 2016 

  • Runner-up of 9th Asian Netball Championship - Singapore, 2014 

  • Runner-up of 8th Asian Netball Championship - Sri Lanka, 2012 

  • Sri Lanka Ranked the 14th in the World Netball Championship - Singapore, 2011 

  • Champion of 7th Asian Netball Championship - Malaysia, 2009 

  • Champion of Maldives National Netball Festival, 2009 

  • Runner up of Malawi Tournament, 2009 

  • Champion of Tri-Nation South Asian Netball Championship - Sri Lanka, 2007 

  • 2nd Runner up of Five Nation Netball Championship - Singapore, 2007 

  • 2nd Runner up of 6th Asian Netball Championship - Singapore, 2005 

National Level: 

  • Champion of Mercantile League Netball Tournament, 2009-2013 & 2015, 2016 

  • Netball Queen of the National Mercantile Tournament, 2010 

  • Best Shooter and Champion of Netball Federation of Sri Lanka Interim Committee, 2006, 2008-2009 

  • Champion of All Island Open Inter Club Netball Championship, 2009 

  • Best Shooter and Champion of Western Province Netball Association, 2008 

  • Champion of Mercantile Services Basketball Association, 2006 

  • Champion of Mercantile Open Netball Championship, 2006 

University Level: 

  • Gold Medalist of Eastern University of Sri Lanka for Special Achievements in Sports and Academy

  • Awarded Sri Lanka Universities Sports Association Award, 2005 & 2006 

  • Vice-Captain of Sri Lanka Universities Netball, 2007 

  • Captain of Eastern University of Sri Lanka Netball, 2005-2006 

  • Captain of Eastern University of Sri Lanka Basketball, 2005 

  • Awarded Batch Top Student in the 1st Year in Arts 

Notes

This article is pending support to be translated into Sinhala and Tamil. Please email storiesofslwomen@everystorysl.org if you would like to support us with translations or if you have any questions.


(ஆரணி  பரமசாமி, தற்போது கேபிடல் மகாராஜா குழுமத்தின் சக்தி வானொலியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  அறிவிப்பாளரும் , நிகழ்ச்சி தயாரிப்பாளரும் ஆவார். அவர் மதுரை காமராஜர்  பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம் மற்றும்  கொழும்பு பல்கலைக்கழகத்தின்  இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். அத்தோடு, இலங்கை ஊடகவியலாராக கடந்த 15 ஆண்டுகள் பணியாற்றுகிறார்.) 

Next
Next

An Enduring Spirit On And Off The Track: Kumudu Priyanka