பல்பரிமாணச் செயல்வாத ஆளுமை : கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்)
3 அக்டோபர் 2023
எழுதியவர்: நிறோஷினிதேவி மகேந்திரன்
Illustration by Danushri Welikala
இலங்கைத் தமிழ்ச்சூழலில் கடந்த முப்பது வருடங்களாக ஒரு பெண்நிலைவாதியாகவும், ஓவியராகவும், பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளராகவும் இயங்கிக்கொண்டிருப்பவரே கமலா வாசுகி என்னும் வாசுகி ஜெயசங்கர். யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை எனும் இடத்தில் சாதாரனமான ஒரு தமிழ்ப் பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தில் அம்பிகாதேவி (கமலா)- ஜெகநாதன் ஆகியோருக்கு 1966.11.29 ஆந் திகதி மூத்த மகளாகப் பிறந்த வாசுகிக்கு ஒரு சகோதரன் உண்டு. பின்னர் தன்னுடைய சிந்தனைகளை ஒத்த தன்னைப்போல் வாழ விரும்பும் நாடகச் செயற்பாட்டாளரும், சமூக மாற்றச் சிந்தனையாளரும், செயல்வாதியுமான சி.ஜெயசங்கர் அவர்களை தனது வாழ்க்கைத் துணைவராக 1994 களில் இவர் ஏற்றுக்கொண்டார்.
தனது ஆரம்பக்கல்வியை தெஹிவளை அலித்தியா மகா வித்தியாலயத்திலும் (1-3ஆம் ஆண்டு வரை), யாழ் சென். ஜோன் பொஸ்கோ பாடசாலையிலும் (4-5ஆம் ஆண்டு வரை) கற்ற இவர், யாழ் வேம்படி மகளீர் உயர்தரக்கல்லூரியில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிக் கற்கைகைப் பூர்த்தி செய்துள்ளார்.
சிறு வயதிலிருந்தே ஓவியம் மீது நாட்டம் கொண்டிருந்த வாசுகிக்கு ஓவியத்தில் மேற்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் அக்கால ஈழத்துச் சூழலில் இல்லாத காரணத்தினால் அவரது நிறைவேறாத ஆசையாக அது இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது. இருந்தும் பாடசாலைக் காலத்தில் இவருக்குக் கிடைத்த திருமதி எம்.பி.ஆர்.சின்னப்பு எனும் சித்திரப்பாட ஆசிரியையின் ஊக்கப்படுத்தலும், அதனைத் தொடர்ந்து பிரபல ஓவியக் கலைஞரான அ.மாற்கு மாஸ்டரிடம் இவர் பெற்ற பயிற்சிகளும் இன்றுவரை கமலா வாசுகியை ஒரு பெண்நிலைவாத ஓவியராக இயங்கு நிலையில் வைத்திருப்பதற்கு உறுதுணையாக அமைந்துள்ளது. தான் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலப்பகுதிகளில் தன்னைச் சூழ நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற விடயங்களை அல்லது தனக்குத் தோன்றும் கேள்விகளை, கருத்துகளை, எண்ணங்களை தனது ஒவியங்களுக்கூடாக இன்றுவரை வெளிப்படுத்தி வருகின்றார்.
வீட்டிற்குச் செல்லப் பிள்ளையாக எல்லோருக்கும் பிடித்த பிள்ளையாக இவர் இருந்தாலும் இவருக்குள் இருந்த ஏன்? என்று கேள்வி கேட்கும் குணமும், போராட்டக்குணமுமே இவரை தனக்கான வாழ்தலை தானே முடிவெடுத்து வாழும் பெண்ணாக வாழ வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. “முதலாவது கேள்வி…… வீடு கூட்டிறது ஏன் பொம்பிளப் பிள்ளைகள் செய்யவேனும் என்றிறது” என்ற கேள்வியிலிருந்தே இவரது கேள்வி கேட்கும் நிலைப்பாடு ஆரம்பித்துள்ளது. சிறுவயதிலிருந்து தனக்குள் எழும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதில் சளைக்காத குணம் கொண்ட இவர், கேள்விகளுக்குப் பதில்கள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அவற்றை எழுத்துகள் மூலம் தனக்கான கிறுக்கல்களாக வெளிப்படுத்தியுமுள்ளார்.
குறிப்பாக பெண் பிள்ளைகள் என்றால் வீடு கூட்ட வேண்டும், வீட்டு வேலைகள் செய்ய வேண்டும், அழகாக வெளிக்கிட வேண்டும், பாவடை-சட்டை, சேலை உடுத்த வேண்டும். மரம் ஏறக்கூடாது, மதிலில் ஏறக்கூடாது என வீட்டில் கூறப்படும் வரையறைகளைத் தாண்டி, தான் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தனது சிறுவயதிலே எடுக்கத் துணிந்தவர். “சாமத்திய வீடு செய்யவிடாமல் ஒரு பெரிய போராட்டம் வீட்டில நடத்தினனான்” என்பது 1980 களில் யாழ்ப்பாணச் சூழலில் வாசுகி ஏற்படுத்திய பெரியளவிலான ஓர் எதிர்ப்பாக அமைந்திருந்தது.
வாசுகி யாழ் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிக் கற்கையைப் (Bio science) படித்துக்கொண்டிருக்கும்போது கலைப்பிரிவில் உள்ள சிலருடன் அவருக்கு ஏற்பட்ட நட்பினால் பல்கலைக்கழகத்தில் இயங்கிக்கொண்டிருந்த “பெண்கள் ஆய்வு வட்டம்”, அவ் வட்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த சகோதரிகளின் நட்பு, வெளியில் இயங்கிக்கொண்டிருந்த பெண்களுக்கான இல்லமான “பூரணி இல்லம்”, ஓவியரான அ.மாற்கு மாஸ்டர் மற்றும் ராஜினி திரணகம, சித்திரலேகா மௌனகுரு, நாடகவியளாளரான குழந்தை ம.சண்முகலிங்கம், சுனிலா அபயசேகரா முதலானோரின் அறிமுகமும், தொடர்பும் தன்னிலை சார்ந்து மட்டுமன்றி பிறருக்காகவும், குறிப்பாக பெண்கள் பற்றியும், பெண்களது வாழ்தல் பற்றியும் சிந்திக்கத்தூண்டியதுடன் அவரை ஒரு பெண்நிலைவாதியாகப் பயணிப்பதற்கு வழிகாட்டியாக அமைந்தது.
தனது வாழ்க்கையில் “தாலி கட்டித் திருமணம் செய்வதில்லை”, “பிள்ளை பெறுவதில்லை” என்ற இரண்டு முக்கியமான நிலைப்பாடுகளை இவர் எடுத்துக்கொண்டார். திருமணத்தில் நிகழ்த்தப்படும் பெரும்பாலான விடயங்கள் பெண்களுக்கு மாத்திரம் வலியுறுத்தப்படுவதால் அந்த விழுமியங்கள் ஏன் ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை என்பது இவருக்குக் கேள்வியாகவே இருந்துள்ளது. குறிப்பாக தாலி கட்டுவது, அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது அவற்றிற்கூடாக வலியுறுத்தப்படும் கற்பு-ஒழுக்கம் ஏன் பெண்களுக்கு மாத்திரம் கூறப்படுகின்றன? ஆண்களுக்கு கற்பு-ஒழுக்கம் இல்லையா? இத்தகைய சடங்குகளில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் ஏன் பாராபட்சங்கள் காட்டப்படுகின்றன போன்ற காரணங்களினால், தான் தாலி கட்டித் திருமணம் செய்வதில்லை என்று 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணச்சூழலில் தீர்க்கமானதொரு நிலைப்பாட்டை ஜெயசங்கருடன் இணைந்து எடுத்திருந்தார். அச்சந்தர்ப்பத்தில் அவர் தன்னை ஒரு பெண்நிலைவாதியாக அடையாளப்படுத்தவுமில்லை. பெண்நிலைவாதிகளுடன் நெருங்கிய தொடர்பிலும் இருக்கவில்லை.
1995 ஆம் ஆண்டில் தனது இணையருடன் மட்டக்களப்புக்கு வந்த வாசுகி தற்போதுவரை மட்டக்களப்பில் வசித்து வருகின்றார்.
மட்டக்களப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் தன்னை ஒரு பங்காளராக இணைத்துக்கொண்டு பல்வேறு பெண்கள் உரிமைகள் செயற்பாடுகளில் ஈடுபடத்தொடங்கினார். (1995 இன் கடைக்கூறுகளில் இருந்து சூரியா கலாச்சாரக்குழுவுடன் தொண்டர் அடிப்படையில் இணைந்து நாடகங்கள், பயற்சிப்பட்டறைகளை மேற்கொண்டார். 1997-1999: Committee member> 1999-2003March: Coordinator> 2003-2007: Committee member> 2019-2022: Board member)
இவர் மட்டக்களப்பிலுள்ள சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தில் வேலை செய்யும்போது யுத்தம் காரணமாக பிள்ளைகளை இழந்த அம்மாமார், காணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடுகின்ற அம்மாமார், பிள்ளைகளுக்குப் பாதுகாப்பில்லை என்று பயந்து வெளிநாடுகளுக்குச் செல்வோர் எனப் பலரை இவர் காண நேரிடுகின்றது. இவ்வாறு பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர்களுடன் அவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபடத் தொடங்குகின்றார். இச்சந்தர்ப்பத்திலேயே இவர் “என் குழந்தை போருக்கல்ல” எனும் நிலைப்பாட்டை தனது இணையருடன் இணைந்து எடுத்துள்ளார். “அந்த நேரம் பாதிக்கப்பட்ட அம்மாமாரோட, பிள்ளைகளோட வேலை செய்யத் தொடங்கிட்டன். ஒவ்வொரு நாளும் அந்தப் பிரச்சனைகளப் பாத்துக்கொண்டிருக்கிறம். எங்களுக்கும் தெரியும் எங்களுக்கு எண்டு ஒரு பிள்ளை இருந்தா இந்த அச்சுறுத்தல்கள், அபாயங்களுக்கு முகங்கொடுக்கிறதுக்கு தைரியம் இருக்காது. நான் நானாக ஒரு அபாயத்த எதிர்கொள்ளலாம். ஆனா எனக்கு ஒரு பிள்ளை இருந்தா அதையும் சேத்து இந்த அபாயத்துக்கு எப்படி உட்படுத்தலாம் எண்டு எனக்குத் தெரியாது. அப்பதான் நாங்க ரெண்டு பேரும் தீர்மானிச்சது….. இந்த நாட்டில நாங்க இருக்கிறதென்டா பிள்ளைகள பெத்துக்கொள்ளாம இருப்பம். இருந்தமென்டா நாங்க சுயாதீனமா வேலை செய்யிறதுக்கு கொஞ்சம் இடமிருக்கும். பிள்ளை ஒன்டு இருந்தா அந்தப்பிள்ளையிட எதிர்காலத்தையும் சேத்து யோசிக்கக்குள்ள நாங்க இந்த நாட்டில இருக்கேலாமப் போகும். அல்லது கன வேலை செய்யேலாமப் போகும். அப்பதான் நான் “என் குழந்தை போருக்கல்ல” என்டு சொல்லி ஒரு நிலைப்பாடும் எடுத்தனான். பிள்ளை பெத்துக்கொள்ளிறல்ல எண்ட நிலைப்பாட்ட எடுக்கக்குள்ள அந்த நிலைப்பாட்ட தாங்கிக்கொள்றதுக்கு எனக்கு கலைகள்தான் உதவியா இருந்தது. நிலைப்பாட்ட வெளிப்படுத்திறதுக்கு கவிதைகள், ஓவியங்கள்தான் எனக்கு உதவியா இருந்தது. என் குழந்தை போருக்கல்ல என்டு நான் எடுத்தது இன்டைக்கு வரைக்கும் எனக்கு அது திருப்தியான முடிவு. ஏனென்டா இன்டைக்கு வரைக்குமே எனக்குத்தெரிய நான் ஒரு பிள்ளைய பெத்தன் என்டா அந்தப்பிள்ளை ஒரு மதிப்பான உரிமையான சமத்துவமான வாழ்தல் வாழ்றதுக்கான சூழல் இந்த உலகத்தில இல்ல. அந்த அச்சத்தோட நான் ஒரு குழந்தைய வளக்கிறத விட நான் பெறாம இருக்கிறது நல்லம் என்டுதான் நான் இன்டைக்கு வரைக்கும் யோசிக்கிறன்.”
இவ்விரு நிலைப்பாடுகளையும் இவர் தன்னுடைய வாழ்தலில் எடுத்த மிக முக்கியமான நிலைப்பாடுகளாகக் கருதுகின்றார்.
சூரியாவினைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சிறுவர் அமைப்பிலும், அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களிலும் பெண்கள், சிறுவர்கள் சார்ந்த வேலைத்திட்டங்களுக்குப் பொறுப்பான அலுவலராக, நிபுணத்துவ ஆலோசகராகப் பல தளங்களில் கடமைகள் செய்யும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டார். இதனூடாகப் பல காத்திரமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
தற்போது சங்கத் எனப்படும் தெற்காசிய பெண்நிலைவாத வலையமைப்பின் மையக்குழு உறுப்பினராகவும் (SANGAT Co-group member), நூறுகோடி மக்கள் எழுச்சி (One Billion Rising) செயற்பாட்டின் இலங்கையின் இணைப்பாளராகவும் இயங்கி வருகின்றார்.
அத்துடன் பெண்கள் உரிமைகள், மனித உரிமைகள் அமைப்புகளுடனும் மற்றும் சமூகமட்ட பெண்கள் குழுக்களுடனும் இணைந்து பிரச்சாரங்கள், வல்லமைப்படுதல் போன்ற பெண்நிலைவாத மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகளைச் செய்கின்ற தன்னார்வச் செயற்பாட்டாளராகவும் (Volunteer Activist), பால்நிலை சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் சார்ந்த பயிற்றுவிப்பாளராகவும், ஆலோசகராகவும் பயணம் செய்கின்றார்.
மேலும் இவர் ஒரு பெண் ஓவியராக, ஓவியச் செயல்வாதியாக, கருத்து ஓவியையாக (Cartoonist), கைவினைக்கலைஞராக, புனைகதை எழுத்தாளராக, கவிஞராக, பாடலாசிரியையாக, நாடக அரங்கின் காண்பியக் கலைஞராக, பறையறைபவராக எனப் பல்வேறு ஆளுமைகளைக் கொண்டுள்ளதோடு, வன்முறையற்ற வாழ்விற்கான ஓவியர்கள் குழு, சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு, நீதிக்கான பறையிசைக்குழு முதலியவற்றின் இணை நிறுவனராகவும், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிரான ஆண்கள் குழுவின் உருவாக்குனராகவும், அனேகமானோருக்கு நல்ல தோழியாகவும், சகோதரியாகவும், தாயாகவும், வழிகாட்டியாகவும், நலன்விரும்பியாகவும் இருந்து வருகின்றார்.
இவரது படைப்புகளான ஓவியங்கள், கவிதைகள், பாடல்கள், நாடகச் செயற்பாடுகள், கருத்தோவியங்கள் அல்லது கார்ட்டூன்கள் (cartoons) அனைத்திலுமே பெரும்பாலும் போரின் இன்னல்கள், பாலியல் வன்முறையின் கொடுமைகள், இடப்பெயர்வுகள், அன்பானவர்களின் இழப்புகள், சாதாரண மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் எனப் பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுவதோடு, அதிகாரங்களைக் கேள்வி கேட்பதாகவும், இயற்கையோடு இணைந்த தன்னிறைவான சமத்துவ வாழ்தலை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளன.
கமலா வாசுகி தன்னுடைய சமூக மாற்றத்துக்கான செயல்கள் மூலம் பலரையும் ஈர்த்துள்ளார். அந்தவகையில் பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள், வாசுகியினுடைய கலந்துரையாடல்கள் மற்றும் பயிற்சிகளில் பங்குபற்றியவர்கள், தனது இணையருடைய (ஜெயசங்கர்) மாணவர்களாக இருந்து தொடர்ச்சியான சந்திப்புகளில் பங்குபற்றியவர்கள், கலைஞர்கள், சிறுவர்கள் எனப் பலர் இவரது செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவருடன் இணைந்து சமூக மாற்றச் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாக விளங்குகின்றனர்.
பெண் விடுதலை என்பது சமூகங்களின் அனைத்துமட்ட மக்களின் விடுதலையாகக் கருதும் இவர் பொருளாதாரத் தங்கிவாழாத் தன்மை - தன்னிறைவில் நம்பிக்கை கொண்டுள்ளார். “எங்களைச் சுத்தியிருக்கிற எங்கட சமூகத்திட உற்பத்தி, பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் முன்னுரிமை குடுக்கிறது……. வெளிநாட்டில தங்கி வாழ்ற தன்மைய குறைக்கிறது. இங்க இருந்து கொண்டு அமெரிக்காவில தங்கி வாழாம, எங்கட கிராமத்துக்குள்ள இருக்கின்ற ஏனையவர்களிட்ட தங்கிவாழ்ற தன்மையா மாத்திறது”
ஏனையவர்கள் மீதும், தன்னைச் சூழவுள்ள இயற்கை மீதும் மேலாதிக்கம் செலுத்தாத வாழ்தலை இவர் வாழ விரும்புவதோடு, தன்னுடைய உரிமை பற்றிப் பேசும்போது ஏனையோரது உரிமைகளையும் (பூமி, இயற்கை உட்பட) மதிக்க வேண்டும் எனக் கருதுகின்றார். அத்தோடு இவர் பிளாஸ்ரிக், பொலித்தின் பாவனையை இயன்றவரை தவிர்ப்பதும், உள்ளூர் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், இயற்கைச் சூழலை பாதுகாப்பதும் அவசியம் எனக் கூறுகின்றார்.
மேலும் பெண்கள் - ஆண்கள் - பால்நிலை பல்வகைமையினர் என அனைவரும் மரியாதையுடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்குரிய சூழலை உருவாக்குதல் இன்றைய காலத்தின் தேவை என்பதை வலியுறுத்தி பல்வேறு செயற்பாடுகளை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.
Reference Links and Further Readings:
பிரியா.இ, 'வாசுகி ஜெயசங்கரின் காண்பியக்கலைக் கண்காட்சி பற்றிய ஒரு பார்வை', தமிழருவி 27.ஏப்;பிரல் 2023, பக் -15,16.
மட்டு நகரில் கமலா வாசுகியின் ஓவியக் கண்காட்சி! https://voiceofmedia.lk/?p=2095
மட்டக்களப்பில் வாசுகியின் ஓவியக் கண்காட்சி! | http://www.battimedia.lk/2023/04/blog-post_27.html
மட்டக்களப்பில் ஐந்து தினங்களுக்கு கமலா வாசுகியின் ஓவியக்கண்காட்சி!!http://www.maddunews.com/2023/04/blog-post_16.html
கமலாவாசுகியின் ‘கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தல்’ https://newsinlanka.com/கமலாவாசுகியின்-கடந்த-கா/
Kamala Vasuki: A journey through artistic expression and feminist perspective https://www.sundayobserver.lk/2023/03/26/kamala-vasuki-journey-through-artistic-expression-and-feminist-perspective
Notes
This article is pending support to be translated into Sinhala and English. Please email storiesofslwomen@everystorysl.org if you would like to support us with translations or if you have any questions.
கமலா வாசுகியின் கலையாக்கங்களில் சில:
கவிதை
வரம் தர வாரீர்
ஒரு வரம் தாரீர்
உலகிலுள்ளோரே - ஒரு வரம் தாரீர்
கனவில், நினைவில்
தவமாய் உயிர் அடியில்
கனக்கும் என் பிள்ளை - பிறக்க வரம் தாரீர்
அணுவோ ஆயுதமோ
சகோதரனின் ஆத்திரமோ
கொல்ல முடியா என் பிள்ளை
இயற்கையால் அன்றி வேறெதனாலும்
இறவா வரம் பெற்ற என் பிள்ளை
காற்றை விற்கா,
நீரை விற்கா,
அண்டம் பிளக்கும் ஆயுதந் தரிக்கா,
கருப்பைச் சுவரைச் சுரண்டத் தெரியா,
தளிர்நடை பயின்ற புல்லின் மீது
அமில மழை பொழிவிக்கத் தெரியா,
அறிவற்ற என் உயிர்க் குழந்தை
பிறப்பதற்காய் - ஒரு வரம் தாரீர்
இன்று பிறக்கேல் என்றும் பிறக்கா
மனிதக் குழந்தை - பிறப்பிக்க வாரீர்.
(ஆனி 2002 சூரியாவின் பெண்கள் செய்தி மடலில் வெளியானது)
ஆதித்தாய் பாடல்
ஆதித்தாய் இங்கே வந்தாள் - மக்களைக் காண
ஆதித்தாய் இங்கே வந்தாள்.
ஆதித்தாய் அன்றொரு காலம்
கண்ட சமத்துவம்
மாயமாய்ப் போக
மக்களே மக்களைத் தாக்க
கேள்விகள் கேட்க வந்தாள் இங்கு (ஆதித்தாய்)
ஆதித்தாய் எங்கள் அன்னை
அவள் வழியில்
வந்தனர் மக்கள் குடிகள் - மக்கள் குடிகள்
அன்னையரை மறந்தனரே
வன்மங்கள் கொண்டு
பெண்களையே வதைத்தனரே
ஒரு மகள் அலற
ஒரு மகள் கதற
பேத்தியும் பூட்டியும்
பதறிடக் கருதிட
ஆதித்தாய் இங்கே வந்தாள் - கேள்விகள் கேட்க
ஆதித்தாய் இங்கே வந்தாள்
வேற்றுமை மறைய
ஒற்றுமை வளர
வாழ்க்கையின் அர்த்தம்
பெருகிடப் பெருகிட
ஆதித்தாய் இங்கே வந்தாள் - மாற்றங்கள் காண
ஆதித்தாய் இங்கே வந்தாள்.
வாழி பாடல்
தந்தனத னாதனத னாதனத னானா
தனனாதா னாதந்த னாதந்த னானா(2)
பூமியே இயற்கையே நீ வாழி வாழி
பல்லுயிரும் வாழ உன் வரம் தந்தாய் வாழி
மாரியே நீர் பொழிவாய் நீ வாழி வாழி
ஊற்றுக்கள் சொரியட்டும் நீர் வாழி வாழி
காற்றுடன் எரிக்கும் வெயில் பனிப் பொழிவும் வாழி
பொங்கும் கடல், மலைகளுடன் பல்மண்ணும் வாழி
தந்தனத னாதனத னாதனத னானா
தனனாதா னாதந்த னாதந்த னானா
மண்ணுக்குள் வாழும் நம் உயிர்கள் வாழி
காற்றிலும் கலந்துள்ள சிற்றுயிர்கள் வாழி
ஓடுமுயிர் ஊரும் உயிர் பறக்கும் உயிர் வாழி
நிற்பதுவும் நடப்பதுவும் நீந்துவதும் வாழி,
ஆழத்தில் வேரூன்றும் பெருமரங்காள் வாழி
அடியோடி நிலம் பரவும் புல்லினங்காள் வாழி
தந்தனத னாதனத னாதனத னானா
தனனாதா னாதந்த னாதந்த னானா
பூமியே இயற்கையே நீ வாழி வாழி
பல்லுயிரும் வாழ உன் வரம் தந்தாய் வாழி
சந்திரரே சூரியரே வாழிய வாழி
அண்ட சராசரங்கள் வாழி நீடூழி!!!
(ஆக்கம் - கமலா வாசுகி – 29.01.2021)
என் குழந்தை போருக்கல்ல.
வாசுகி தனது ஓவியப் படைப்புகளை தனிநபர் கண்காட்சிகளாகவும், கூட்டு ஓவியக் கண்காட்சிகளாகவும் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் காட்சிப்படுத்தியுள்ளார். அவை :
2020 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கல்லடிப்பாலம், திறந்தவெளிக் காண்பியக் காட்சி, மட்டக்களப்பு, இலங்கை
2019 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், ஓவியக்கூடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை,
2018 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கிழக்குப்பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, இலங்கை
2018 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கிளிநொச்சி, இலங்கை.
2018 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், திறந்தவெளிக் காண்பியக்காட்சி, சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு, இலங்கை
2017 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், தான்டவன்வெளி, மட்டக்களப்பு, இலங்கை.
2017 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, இலங்கை,
2017 - பெண்கள் மீதான வன்முறைகள் அற்ற வாழ்க்கையைக் கொண்டாடுவோம், வன்முறையற்ற வாழ்வுக்கான ஓவியர்கள், முல்லைத்தீவு, இலங்கை.
2016 - தனியாள் கண்காட்சி, சமூக நீதிக்கான நிறுவகம், அவுஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம், சிட்னி, அவுஸ்திரேலியா
2011 - தனியாள் கண்காட்சி, காட்மண்டு சட்டத்துறைக்கான கல்வியகம், நேபாளம்.
2010 - தனியாள் கண்காட்சி, கலை மற்றும் சமூகவிஞ்ஞானங்கள் துறை, சிட்னி பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா.
2007 - வாழ்க்கைவெளி, மூன்றாவதுகண் உள்@ர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டக்களப்பு, இலங்கை.
2004 - கோடுகள், வெளி, வாழ்க்கை, திரிகோன் கலை மையம், ஹரோல்ட் பீரிஸ் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை.
2002 - வண்ணங்களில் வாழ்வெழுதி, தனியாள் கண்காட்சி, மகாஜனாக்கல்லூரி, மட்டக்களப்பு.
2002 - பெண்களும் சமாதானமும், இனத்துவக் கற்கைகளுக்கும் சமாதானத்துக்குமான மையம், பெயார் பூற் (Barefoot) கலைக்கூடம்
2001 - இன வித்தியாசங்களைக் கொண்டாடுதல், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு, லயனல்வென்ட் ஓவியக்கூடம், கொழும்பு, இலங்கை.
1999 - வடகிழக்கின் ஐந்து ஓவியர்களின் காட்சிப்படுத்தல், வெஸ்லிக் கல்லூரி, கல்முனை, இலங்கை.
1999 - ஹேக் சமாதானத்துக்கான வேண்டுகோள் மாநாடு, ஒல்லாந்து.
1998 - தனியாள் காட்சிப்படுத்தல், வண்ணங்களில் உணர்வெழுதி, சாள்ஸ் மண்டபம், மட்டக்களப்பு. இலங்கை.
1998 - வட-கிழக்கு ஒவியர்களின் காட்சிப்படுத்தல், வட-கிழக்கு மாகாணசபை, திருகோணமலை, இலங்கை.
1998 - பெண்களின் படைப்பாற்றல்களைக் கொண்டாடுதல், அரசசார்பற்ற பெண்கள் நிறுவனங்களின் கூட்டமைப்பு, தேசியக் கலைக்கூடம், கொழும்பு, இலங்கை.
1997 - பங்கேற்பாளர் சர்வதேச கலைஞர்கள் முகாம் (fe;jsk) மற்றும் காட்சிப்படுத்தல், தேசிய கலைக்கூடம், கொழும்பு. இலங்கை.
1991 - சமகால இளம் ஓவியர்களின் கண்காட்சி, ஜோர்ஜ் கீற் மன்றம், கொழும்பு, இலங்கை.
1989 - தனியாள் காட்சிப்படுத்தல், பிரெஞ்ச் நட்புறவுக் கழகம், யாழ்ப்பாணம். இலங்கை.
1988 - பெண் ஓவியர்களின் காட்சிப்படுத்தல், பெண்கள் ஆய்வு வட்டம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் இலங்கை.
இவருடைய ஓவியச் செயற்பாடுகளைக் கவனத்திற் கொண்டு 2001 ஆம் ஆண்டு யப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் இவருக்கு அனைத்துலக BUNKA AWARD வழங்கி மாண்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(நிறோஷினிதேவி மகேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்நிலைவாதி மற்றும் சமூக மாற்றச் செயற்பாட்டாளர், பால்நிலை சமத்துவம், பெண்கள் உரிமைகள் மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குகின்ற ஒரு வளவாளர், நீதிக்கான பறையிசைக் குழுவின் (Drumming for Justice) ஒரு ஆற்றுகையாளர்)

