Narrative Reading List on Women and the City

The Narrative Reading List was developed by Iromi Perera, Meghal Perera and Piyumi Wattuhewa from Colombo Urban Lab for Everystory
 

அறிமுகம்

“எந்தவொரு குடியிருப்பும், அதனை உருவாக்கிய சமூகத்தின் சமூக உறவுகள் பௌதீக அமைப்பாகப் பொறிக்கப்பட்ட ஒரு வடிவமாகும்… நமது நகரங்கள் என்பவை கல்லிலும், செங்கலிலும், கண்ணாடியிலும், கான்கிரீட்டிலும் பொறிக்கப்பட்ட ஆண் ஆதிக்கத்தின் பிரதிபலிப்பாகும்” — ஜேன் டார்க், புவியியலாளர்

வரலாற்று ரீதியாக, நகரங்கள் ஆண்களுக்காகவும் ஆண்களாலுமே திட்டமிடப்பட்டுள்ளன. ஒரு நகர்ப்புற வெளியில் பெண்ணாக இருப்பதன் பொருள் என்ன, மேலும் இந்தச் சூழல்களில் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புகள் யாவை என்பதை ஆராய்ந்து-1970களிலிருந்து, கட்டிடக் கலைஞர்கள், புவியியலாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள், அத்தகைய கட்டமைக்கப்பட்ட சூழல் பெண்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்துக் கேள்வி எழுப்பினர். 19ஆம் நூற்றாண்டில் நகரமயமாக்கல் அதிகரித்தபோது, ​​இந்த அறிமுகமில்லாத நெரிசலான சூழல்களில் பெண்களின் இடம் குறித்த அக்கறைகளும் அதிகரித்தன. ஏனெனில், நகரங்கள் பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் முதல் காதல் சந்திப்புகள் வரை குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தையும் தம் வாழ்க்கை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தையும் வழங்கின.

ஆரம்பகாலத்தில் வருமானம் தேடி நகரத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் பெரும்பாலும் திருமணமாகாத ஆண்களாகவே இருந்தனர். இதனால் காலனித்துவ நகரங்களில் பெண்கள் பெரும்பாலும் குறைவாகவே இருந்தனர்; கொழும்பும் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், கொழும்பு நிறுவப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 1960-களில்தான் அதன் பால்நிலை விகிதாசாரமானது நாட்டின் பிற பகுதிகளுடன் சமநிலையை அடைந்தது. கலப்பினத் திருமணங்கள் மற்றும் சமயப் பள்ளிகள் போன்ற செயல்முறைகள் மூலம், காலனித்துவ கொழும்பு ஒரு வெள்ளையின ஆண்களின் நகரத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் பூர்வீக இலங்கை பெண்கள் இருவரையும் கொண்ட ஒரு நகரமாக மாறியதை நிஹால் பெரேரா விவரிக்கிறார. இலங்கையில், நகரம் ஒரு மேற்கத்திய மயமாக்கப்பட்ட மற்றும் நவீன இடமாகப் பார்க்கப்படும் நிலையில், அதற்கு மாறாக கிராமம் தேசிய அடையாளத்தின் தளமாக இருக்கிறது. கலாச்சார கதைகள் கொழும்பில் உள்ள பெண்களை பெரும்பாலும் ஒழுக்கம் குறைந்தவர்களாகவும் மேற்கத்திய மயமாக்கப்பட்டவர்களாகவும் சித்தரித்துள்ளன: கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் ஒரு இளைஞன் நகரத்தின் தாக்கத்தாலும் அங்கு வாழும் பாலியல் ஒழுக்கமற்ற (பொதுவாக யூரேசியப் பின்னணியுடைய) பெண்களுடனும் தொடர்பு கொள்வதன் மூலமும் தன்னை இழந்துவிடுகிறான் என்ற பொதுவான கருத்தை ஹர்ஷண ரம்புக்வெல்ல விவரிக்கிறார்.

1970களில் கொழும்பு

வீட்டுப்பணி?

கட்டிடக்கலைஞரான டோலோரஸ் ஹேடன், நகரத் திட்டமிடலானது ஒரு நூற்றாண்டு காலமாக “பெண்ணின் இடம் வீடுதான்” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது என்று குறிப்பிடுகிறார். பெண்கள் வீட்டிற்குள் மட்டுமே இருப்பார்கள் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட இந்த வீடுகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகரங்கள், பெண்களை உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கட்டுப்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார். இந்த நகரங்கள், குடும்பத்தின் வருமானத்திற்கு உழைக்கும் ஒரு ஆண், புறநகர்ப் பகுதியிலிருந்து நகரத்தில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று, தன் மனைவியால் நிர்வகிக்கப்படும் அமைதியான இல்லற இன்பச் சூழலுக்கு திரும்புவார் என்ற மாதிரியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன. நகரம் என்பது பொருளாதாரச் செயல்பாடு, வேலை மற்றும் உற்பத்திக்கான ஒரு ஆண்மைக்குரிய இடமாக இருந்தது, அதே சமயம் வீடு என்பது தொழில் செய்பவர்களுக்கான ஓய்வு கிடைக்கும் புகலிடமாக இருந்தது. வீடு என்பது பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்படும் இடமாகவும், வாழ்க்கையும் வேலையும்  தொடர்ச்சியாக இடம்பெற தேவையான  அத்தியாவசிய இல்லப் பணிகள் நடைபெறும் இடமாகவும் இருக்கிறது. சமூக மீள் உற்பத்தி அல்லது பராமரிப்புப் பணி என குறிப்பிடப்பட்டாலும், சமைத்தல், சுத்தம் செய்தல், துணி துவைத்தல், குழந்தைகள் மற்றும் முதியவர்களைப் பராமரித்தல் போன்ற அன்றாடப் பணிகள் பெரும்பாலும் வீடுகளில் பெண்களாலே செய்யப்படுகின்றன.

1950களின் விளம்பரங்கள், பால்நிலை  அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்த இடங்கள் மற்றும் பொறுப்புகளைப் பிரதிபலித்ததுடன், அதனை மேலும் ஊக்குவித்தன.

ஒரு வீட்டை உருவாக்குவதும் நடத்துவதும் எளிதான காரியமல்ல, குறிப்பாக உட்கட்டமைப்பு மற்றும் சேவை வழங்கல் போதிய அளவில் இல்லாமலும், சிதறலாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருக்கக்கூடிய உலகின் தெற்குப் பகுதி நகரங்களில் இது மிகவும் கடினம். நீர், மின்சாரம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை தேவையைப் பூர்த்தி செய்ய போதாமல் இருக்கும்போது அல்லது முற்றிலும் இல்லாதபோது, இந்த வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான பணியை பெரும்பாலும் பெண்களே ஏற்கின்றனர். இது குறிப்பாக கோவிட்-19 காலத்திலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போதும் தெளிவாகப் புலப்பட்டது. கைகளால் துணி துவைப்பது, போஷாக்கான உணவைத் தவிர்ப்பது, எரிவாயுவைச் சேமிப்பதற்காக அபாயகரமான விறகு அடுப்புகளில் சமைப்பது போன்றவை, அந்த நெருக்கடியைச் சமாளிக்க பெண்கள் கையாண்ட உத்திகளாகும். இந்த நெருக்கடியானது, தினக்கூலியை நம்பி வாழ்ந்த மற்றும் கிராமப்புறத்தினரை விட அதிக வாழ்க்கைச் செலவைக் கொண்டிருந்த குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புறக் குடும்பங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. மேகல் பெரேரா, கொழும்பில் உள்ள ஏழை உழைக்கும் வர்க்கத்தினரின் மின்சார நுகர்வு குறித்து ஆராய்ந்து, 2022-2023 காலப்பகுதியில் கட்டண உயர்வுகளின் தாக்கத்தையும், அது பெண்கள் மற்றும் அவர்களின் நேர வறுமை (time poverty/நேரமின்மை) மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் ஆய்வு செய்கின்றார்.

பராமரிப்பு (care) என்பது வீடமைப்புடன் உள்ளார்ந்த முறையில் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி எழுதும் டேவிட் மேடன், “ஒவ்வொரு முறையும் ஒரு பொது வீட்டு திட்டம் இடிக்கப்படும்போதோ அல்லது ஒரு குடும்பம் வெளியேற்றப்படும் போதோ, பராமரிப்பு உள்கட்டமைப்பின் ஏதோ ஒரு பகுதி சிதைக்கப்பட்டு, அது செலவு மிக்க முறையில் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டியுள்ளது. இடையறாத மாற்றங்களால் பாதிக்கப்படும் இன்றைய நவீன நகரம், குடும்பங்களை, சமூக ஆதரவின் கட்டமைப்புகளையும் வலைப்பின்னல்களையும் மீண்டும் மீண்டும் கட்டவும் புனரமைக்கவும், கட்டாயப்படுத்துகிறது.” என்று குறிப்பிடுகிறார். இலங்கையில் இடம்பெயர்வானது, நகர்ப்புறக் குடியிருப்புகளில் வாழும் பெண்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியேற்றப்படும் சாத்தியக்கூறு கூட சமூகங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும், இதிலும் மீண்டும் பெண்களே பெரும் சுமையைச் சுமக்கின்றனர். விரைவில் நடைபெறக்கூடிய வெளியேற்றங்கள்  மற்றும் எதிர்பார்க்கப்படும் இழப்பீடுகள் காரணமாக சொத்து உரிமைத் தகராறுகள் தீவிரமடையும் போது , ​​ஸ்லேவ் ஐலேண்டில் (Slave Iland in Colombo) உள்ள ஒரு குறைந்த வருமானம் கொண்ட குடியிருப்பில் உள்ள பெண்கள் தங்கள் சகோதரர்கள், கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினரிடமிருந்து (in-laws) எவ்வாறான விரோதத்தையும் வன்முறையையும் எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆஷா அபேசேகர விவரிக்கிறார். இடமாற்றம் என்பதே ஒரு அதிர்ச்சியூட்டும் அனுபவமாகும்; குழந்தைகள் வெளியே பாதுகாப்பாக விளையாடுவதை உறுதிசெய்த சமூகப் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு வலைப்பின்னல்கள் இப்போது இல்லை, குறுகிய நடைபாதைகளும் வெளிச்சமற்ற படிக்கட்டுகளும் இளம் வயதுப் பெண்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் சமூகங்கள் இடமாற்றம் செய்யப்படும் கொழும்பின் உயர்மாடிக் குடியிருப்புகளில், சலவை செய்வது போன்ற எளிய பணிகள் கூட எவ்வாறு சிக்கலானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் மாறுகின்றன என்பதை இரோமி பெரேரா எழுதுகிறார்.

உயர்மாடிக் குடியிருப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவது எவ்வாறு பெண்களின் பால்நிலை அடிப்படையிலான துணி துவைக்கும் பணியை மேலும் சிக்கலானதும் அதிக நேரம் எடுக்கக்கூடியதுமான ஒன்றாக மாற்றுகிறது என்பதை இரோமி பெரேரா ஆராய்கிறார்.

நகரங்களைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அணுகுமுறை, அவற்றின் பராமரிப்பு உள்கட்டமைப்பு (urban infrastructures of care) தொடர்பில் பார்ப்பதாகும். இவை, பராமரிப்புப் பணிகளுக்குத் (caregiving labour) தடையாகவோ அல்லது ஆதரவாகவோ இருக்கும் கட்டமைக்கப்பட்ட சூழலின் அம்சங்களாகும். "குழந்தைப் பராமரிப்பு, பொதுப் போக்குவரத்து அல்லது உணவுச் சேவை இல்லாத ஒரு சூழலைச் சமாளிப்பதற்கான தீர்வுகள் “தனியார்” மற்றும் வணிக ரீதியாக லாபம் தரக்கூடியவையாக மாறிவிட்டன என்று ஹெய்டன் எச்சரிக்கிறார்: மணிநேர அடிப்படையில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மற்றும் குழந்தைக் காப்பாளர்கள் (Baby sitters); உரிமம் பெற்ற பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் (franchise day care) அல்லது பிள்ளைகளை நீண்ட நேரம்  தொலைக்காட்சி பார்க்க விடல்; துரித உணவுச் சேவை; ஒரு கார், சலவை இயந்திரம் அல்லது மைக்ரோவேவ் அடுப்பு வாங்குவதற்கு எளிதான கடன் வசதி." இத்தகைய சூழ்நிலைகள் உருவாக்கும் குறைந்த ஊதிய வேலைகளை செய்யும் ஏழைப் பெண்களே, இந்தத் தனியார் தீர்வுகளுக்கான செலவை சுமக்கின்றனர்; இருப்பினும், பராமரிப்பு உள்கட்டமைப்புகளில் இன்னும் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் சிந்திக்கவும் முடியும். உதாரணமாக, கொலம்பியாவின் பொகோட்டா நகரின் முதல் பெண் மேயர், “Care Blocks” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது பராமரிப்பு சேவைகளை வழங்குபவர்களதும்  (caregivers) அவர்களை சார்ந்திருப்பவர்களதும் தேவைகளை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த பொதுச் சேவைகளை வழங்கும் திட்டமாக, 15–20 நிமிட நடை தூரத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, குழந்தைப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு மற்றும் வேலைப் பயிற்சி ஆகியவை மட்டுமல்லாமல், சட்ட உதவி, வயது வந்தோருக்கான கல்வி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு வசதிகளும் வழங்கப்படுகின்றன. கொழும்பில், பராமரிப்பு (care) என்பது பெரும்பாலும் தாயின் பொறுப்பாகவே கருதப்படுகிறது.. இது உழைக்கும் வர்க்கப் பெண்கள், முழுநேர அல்லது முறையான  வேலைகளை ஏற்பதை தடுக்கிறது. மேலும், அவர்களின் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளும், பகல்நேரப் பராமரிப்பு மையங்கள் (Day Care) அல்லது பாடசாலைகளின் நேர அட்டவணை மற்றும் அவை கிடைக்கும் தன்மையைப் (availability) பொறுத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.

கொலம்பியாவின் பொகோட்டா நகரில் உள்ள ஒரு "பராமரிப்பு மையத்தில்" தங்கள் நிகழ்ச்சிக்காக பெண்கள் பாரம்பரியமான, தளர்வான ஆடைகளை அணிந்துள்ளனர். இந்த வகுப்பானது, அப்பகுதியில் தமது குடும்பத்திற்காக ஊதியமற்ற பராமரிப்புப் பணியில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் வழங்கப்படும் இலவச சேவைகளில் ஒன்றாகும்.

நகரத் திட்டமிடுபவர்கள் பெண்கள் வேலை செய்வார்கள் என்பதனை கணக்கில் எடுக்காமல் இருக்கலாம், ஆனால் யதார்த்தம் மிகவும் வேறுபட்டது. உலகின் தெற்கிலுள்ள நகரங்களில், பெரும்பாலான பெண்கள் குறைந்த ஊதியமும் நிலையற்ற தன்மையும் கொண்ட முறைசாரா (informal) துறைகளில் பணிபுரிகின்றனர். உலகெங்கிலும் உள்ள சந்தை விற்பனையாளர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர், இருப்பினும் அவர்களின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்ட இடங்களின் காரணமாக அவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். பெண் விற்பனையாளர்களுக்கு பெரும்பாலும் கழிப்பறைகள் மற்றும் சுகாதார வசதிகள் இருப்பதில்லை, அப்படியே இருப்பினும் அவை பெரும்பாலும் பால்நிலை அடிப்படையில் பிரிக்கப்படாததால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

முறைசாரா விற்பனையின் (informal vending) நிலையற்ற தன்மையானது, வேலை செய்யும்  சூழலை மேலும் கடினமாக்குகிறது. பெண் விற்பனையாளர்கள் பொலிஸார், ஆண் விற்பனையாளர்கள் மற்றும் சில சமயங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்தும் கூட வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதோடு, மேலும் தொழில் செய்யம் இடத்தில் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலையும் எதிர்கொள்கின்றனர்.

தற்காலிகப் பெண் தொழிலாளர்களின் (Female-gig workers) நிலைமையும் எவ்விதத்திலும் மேம்பட்டநிலையில் இல்லை; அவர்கள் பாலியல் வன்முறை, மாசு காரணமான பாதிப்புக்கள் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு முறைமைகளின் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்கள்.

காலநிலை மாற்றம் மற்றும் அதிகரித்து வரும் கடும் வெப்பத்தின் தீவிரமும் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்துள்ள போக்கும் காரணமாக இத்தகைய வேலைகள் மேலும் சிக்கலாகின்றன. கொழும்பில், வெளிப்புறங்களில் வேலையில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள் வெப்ப அழுத்தத்தால் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுகின்றனர்: வெப்பத்தில் பொருட்கள் பழுதடைவதனால் வருமான இழப்பு ஏற்படுகிறது; கழிப்பறை வசதி இல்லாதபோது தண்ணீர் அருந்துவதைக் குறைப்பது, நோய்த் தொற்றுகள் மற்றும் பிற உடல்நலப் பாதிப்புகளுக்கு காரணமாகிறது. பொதுக் கழிப்பறைகள் போன்ற அடிப்படை பொது உட்கட்டமைப்பு வசதிகள்  இல்லாதது, இந்த பாதிப்புகளை மேலும் தீவிரப்படுத்துகிறது. தங்களது சொந்த சமூகங்களில் கூட, தெற்காசியா முழுவதும் உள்ள குறைந்த வருமானக் குடியிருப்புகளில் வாழும் பெண்களுக்கு கழிப்பறை அணுகல் இல்லாதது, அவர்களின் உடல் நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கிறது. பால்நிலைப் பாகுபாட்டின் மற்றொரு மையப் புள்ளியாக, நகரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் மாறுகின்றன: 2018-ல் பாரிஸில் நிறுவப்பட்ட திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்கள், “பொது இடங்களில் ஆண்களே உள்ளனர்”  என்ற எண்ணத்தை வலுப்படுத்துவதாகக் கூறி பரவலாகக் கண்டிக்கப்பட்டன.

நகர்வு, பாதுகாப்பு மற்றும் நகரத்தை மீட்டெடுத்தல் 

நகரத்தில் பெண்களின் நகர்வு பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களின் போக்குவரத்து நடைமுறைகள் மாறுபட்டதாக இருக்கும்; அவர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று வருவது மட்டுமல்லாமல், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் பராமரிப்பு கடமைகளுக்காக கூடுதல் பயணங்களை மேற்கொள்கிறார்கள். மேலும், அவர்கள் தங்கள் ஆண் சகாக்களை விட அதிகமாக நடைப் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பால்நிலைப் பாத்திரங்கள் கடுமையாக காணப்படும் இடங்களில், பெண்கள் பெரும்பாலும் வீட்டுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், செயல்திறன் மிக்க மற்றும் மலிவான பொதுப் போக்குவரத்து சேவைகள், பெண்களின் நகர்வை அதிகரிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். கர்நாடகாவின் “சக்தி திட்டம்”, மாநிலப் பேருந்துகளில் அனைத்துப் பெண்களுக்கும் திருநர்களுக்கும்  இலவசப் பயணங்களை வழங்குகிறது. இதன் விளைவாக, பெண்களின் நிதிச் சுதந்திரம் அதிகரித்தது, அவர்கள் வேலைவாய்ப்புகளில் சேரத் தொடங்கினார்கள் மற்றும் முதல் முறையாக பொழுதுபோக்கு பயணங்களையும் மேற்கொண்டனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அச்சுறுத்தல், பெண்களின் போக்குவரத்துத் தேர்வுகளையும் பாதிக்கிறது. UNFPA வின் ஓர் ஆய்வின்படி, இலங்கையில் 90% பெண்கள் பொதுப் போக்குவரத்துகளில் ஏதேனும் ஒரு விதமான பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர். இத்தகைய அனுபவங்கள் பெண்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் தொடர் தாக்கங்களை  ஏற்படுத்தக்கூடும். நீண்ட தூர பயணங்கள் பெண்கள்  தொழில்வாய்ப்புகளில் இணைவதை தடுக்கக்கூடும். அதே சமயம், பெண்பிள்ளைகள் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதானால் அவர்களுடன் செல்ல வேண்டியிருப்பதால், பராமரிப்பாளர்களின் (caregivers) நேரப் பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும். பயண முன்பதிவு செயலிகள், குறிப்பாக இரவு நேரங்களில், பெண்களின் நகர்வை எளிதாக்கலாம், இருப்பினும் அவற்றுக்கும் அதற்கே உரிய அபாயங்கள் உள்ளன.

பொதுப் போக்குவரத்துகளில் இடம்பெறும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா, ஜப்பான் மற்றும் ஈரான் போன்ற பல நாடுகள் பெண்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் ஒரு முயற்சியாக, பெண்கள் மட்டுமே பயன்படுத்தும் வண்டிகளையும் பேருந்துகளையும் அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது குறித்த கவலைகளைத் தணிக்கக்கூடும் என்றாலும், பால்நிலை அடிப்படையில் பிரிக்கப்பட்ட போக்குவரத்து நடைமுறைகள், மனிதர்களில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும்; மேலும் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின்றி ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் இணைந்து இருப்பது சாத்தியமில்லை என்ற எண்ணத்தை இது வலுப்படுத்துகிறது என்றும் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து நாம் சிந்திக்கும் விதத்தில் ஒரு புதிய அணுகுமுறையை பல அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது, பால்நிலைப் பாகுபாட்டை வலுப்படுத்தவும், பெண்களின் சுதந்திரங்களை கட்டுப்படுத்தவும் ஆணாதிக்க சக்திகள் பயன்படுத்தக்கூடிய ஒரு இலக்கு என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். பெண்கள் மற்றும்  நகரங்கள் தொடர்பில் நிகழக்கூடிய சாத்தியமான வன்முறையின் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பதை நாம் கைவிட்டால் என்னவாகும்? ஆபத்தை எதிர்கொள்ளும் உரிமை (right to risk) என்பது, பெண்களுக்குப் பொதுவெளியில் எந்த நிபந்தனையும் இல்லாத அணுகலை (Access) வழங்கும் ஒரு விடுதலையளிக்கும் இலக்காக இருக்கலாம் என்று ஷில்பா ஃபட்கே மற்றும் சமீரா கான் வாதிடுகின்றனர். இந்தத் தர்க்கத்தின்படி, ஆண்களைப் போலவே பெண்களும் இரவு நேரங்களில் நகரத்தில் சுதந்திரமாகச் செல்ல முடியும்; ஏனெனில் பொதுவெளியும் அதனுடன் தொடர்புடைய இன்பங்களும் அவர்களுடைய உரிமைகளில் ஒன்றாகும். நகரத்தை இன்பம், மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த இடமாக கருதுவது, பெண்களின் இடத்தை சமையலறையில் மட்டுமே பார்க்கும் பழமையான எண்ணத்தை சவாலுக்குள்ளாக்கும் ஒரு வழியாக அமையலாம். 'ஏன் சும்மா சுற்ற வேண்டும்?' (Why Loiter?) என்ற தங்களின் முக்கியப் படைப்பில், சமீரா கான், ஷில்பா ஃபட்கே மற்றும் ஷில்பா ரானடே ஆகியோர், ஆண்கள் எப்போதும் செய்வது போல, பெண்களும் நகரத்தில் “சும்மா சுற்றித் திரியும்” உரிமைக்காக வாதிடுகின்றனர். எந்த “நியாயமான” அல்லது “மரியாதைக்குரிய” காரணமுமின்றி பொதுவெளியில் இருப்பதன் மூலமே, பெண்கள் நகர்ப்புற இடங்களையும் அதனுடன் இணைந்த முழுமையான குடியுரிமையையும் உண்மையில் மீட்டெடுக்க முடியும்.

என்ற நூல், #GirlsatDhabas மற்றும் #GirlsPlayingStreetCricket போன்ற முயற்சிகளைத் தூண்டியுள்ளது; இவற்றின் மூலம் தென் ஆசியா முழுவதும் பெண்களும் சிறுமிகளும் நகர்ப்புற இடங்களை மீட்டெடுத்து வருகின்றனர்.

வளங்கள்

பெண்ணிய நகரம்: லெஸ்லி கெர்ன் எழுதிய ஒரு கள வழிகாட்டி (Feminist City: A Field Guide by Leslie Kern)

உலகத் தெற்கில் நகரங்கள், சேரிகள் மற்றும் பாலினம் - சில்வியா சாண்ட், கேத்தி மெக்ல்வைன் (Cities, Slums and Gender in the Global South - Sylvia Chant, Cathy McIlwaine

சிறந்த அமெரிக்க நகரங்களின் மரணமும் வாழ்வும் - ஜேன் ஜேக்கப்ஸ் 

ஏன் சுற்றித் திரிய வேண்டும்?: மும்பை தெருக்களில் பெண்களும் ஆபத்தும்- ஷில்பா ஃபட்கே, சமீரா கான், மற்றும் ஷில்பா ரானடே

நகர்ப்புற விரும்பத்தகாதவர்கள்: பெங்களூரில் நகர மாற்றம் மற்றும் தெர அடிப்படையிலான பாலியல் தொழில் - நீத்தி பி. மற்றும் அனந்த் காமத் (Urban Undesirables: City Transition and Street-Based Sex Work in Bangalore by Neethi P. and Anant Kamath)

கட்டுரைகள்

பெண்ணியமும் பொது வளங்களின் அரசியலும் - சில்வியா ஃபெடரிசி 

ஆபத்தான உறவுகள் - ஷில்பா ஃபட்கே

ஆக்ராவில் பொதுவெளி மற்றும் ஓய்வுக்கான பெண்களின் தேடல்: கட்டில்கள், முற்றங்கள் மற்றும் ஆற்றங்கரை - மஹிமா தனேஜா

கெய்ரோவில் பாலினம், பொதுவெளி மற்றும் சமூகப் பிரிவினை: வாடகைக்கார் ஓட்டுநர்கள், பாலியல் தொழிலாளர்கள் மற்றும் தொழில்முறைப் பெண்கள்  தொடர்பாக - அனூக் டி கோனிங்

பாலினம், வெளி மற்றும் எதிர்ப்பு: டாக்கா தெருவின் நகர விற்பனையாளர்கள் - மெஹேரி தமன்னா, கியோகோ குசகபே, ஜோயி ஷைரி சாட்டர்ஜி & விலாஸ் நிதிவட்டனானோன்

கொழும்பை நெருக்கமானதாக மாற்றுதல் - மிஹிரினி சிறிசேனா

இலங்கையில் ஒரு பெண் முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருப்பது எப்படி இருக்கும் - ஜினாரா ரத்நாயக்க

வேடிக்கை பெண்ணியமாக இருக்க முடியுமா? கராச்சி, லியாரியில் பாலினம், இடம் மற்றும் நகர்வு - நிடா கிர்மானி

பெண்களுக்கான நகரங்களை உருவாக்குதல் மற்றும் பெண்ணியக் கட்டிடக்கலையின் ஆரம்ப காலங்கள் 

Flâneuse: Women Walk the City in Paris, New York, Tokyo, Venice, and London - Lauren Elkin

Flâneuse: பாரிஸ், நியூயார்க், டோக்கியோ, வெனிஸ் மற்றும் லண்டன் நகரங்களில் பெண்களின் நடைபயணம் - லாரன் எல்கின் 

‍ ‍

 பார்க்கவும்

Work at Your Own Risk (உங்கள் சொந்த ஆபத்தில் பணியாற்றவும்) 

What Would a Feminist City Look Like? (பெண்ணிய நகரம் எப்படி இருக்கும்?)

கேட்கவும் 

She Builds: Episode on Minette De Silva (அவள் கட்டுகிறார்: மினெட்டே டி சில்வா பற்றிய அத்தியாயம்) https://www.shebuildspodcast.com/episodes/minnettedesilva?rq=minette

 The Feminist City (பெண்ணிய நகரம்) https://vidhilegalpolicy.in/podcasts/the-feminist-city-trailer/women-in-the-platform-economy-with-dr-sarayu-natarajan-part-2/


Centre for a Smart Future is an interdisciplinary public policy think tank based in Colombo, Sri Lanka. We conduct high quality research, promote collaboration across disciplines, and generate actionable ideas. We like being interdisciplinary and imaginative in how we think about challenges and solutions.

The urbanisation and cities theme at CSF is led by Colombo Urban Lab (CUL). CUL works towards equitable and sustainable cities in Sri Lanka by advocating for research driven policy making where the lived experiences of citizens form the basis of a city’s development. It is a collaborative and interdisciplinary space, enabling connections between research, practice and public policy. Our research and advocacy themes include infrastructure, food environment, climate change, social security and public space.

Next
Next

Narrative Reading List on Women and the City